கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பயணம்


கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 22 Aug 2021 10:55 PM GMT (Updated: 22 Aug 2021 10:55 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சைக்கிள் பயணம் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

சென்னை,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ‘சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவம்’ என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் ஒருகட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) சார்பில் கன்னியாகுமரியில் சைக்கிள் பயணம் நேற்று நடந்தது.

இந்த சைக்கிள் பயணத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மத்திய ரிசர்வ் போலீஸ்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘கன்னியாகுமரி முதல் ராஜ்காட் வரை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணம் 2,850 கி.மீ. கடந்து அக்டோபர் 2-ந்தேதி டெல்லி ராஜ்காட்டில் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், உத்தரப்பிரதேசம் வழியாக டெல்லி நோக்கி இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விடுதலையின் சிறப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாகவும், பயணிக்கும் வழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் நேரில் சென்று இக்குழு பார்வையிட இருக்கிறது.

இந்த சைக்கிள் பயணத்துக்கு பள்ளிபுரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை குழு மைய துணைத்தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்குகிறார். இதேபோன்று, அசாம், குஜராத் மற்றும் ஜம்முவிலிருந்தும் மேலும் 3 பிரமாண்ட சைக்கிள் பயணக்குழுக்கள் விரைவில் தொடங்கப்பட்டு, அக்டோபர் 2-ந்தேதி ராஜ்காட்டில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story