மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்


மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்
x
தினத்தந்தி 24 Aug 2021 10:08 PM GMT (Updated: 24 Aug 2021 10:08 PM GMT)

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

பிரதமராகும் தகுதி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக உள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பத்திரிகைகள்கூட அவருடைய திட்டங்களை புகழ்ந்து எழுதியுள்ளன.

ஒரு மாநிலத்துக்கு வழிகாட்டியாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த நாட்டுக்கு வழிகாட்டியாக முதல்-அமைச்சரின் திட்டங்கள் இருப்பதால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது.

சீர்மிகு நகரங்கள்

தமிழகத்தின் அனைத்து நகரங்களையும் சீர்மிகு நகரங்களாக மாற்றுவோம் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ராசிபுரம் குடிநீர் திட்டத்தில் ரூ.932 கோடியில் புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படும். சங்கரன்கோவில், ராஜபாளையம் பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சியில் 558 இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீர் சமநிலை திட்டம்

தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி அகில இந்திய அளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம். தமிழ்நாட்டில் மட்டும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 48.45 சதவீதம். தற்போது, அது 53 சதவீதமாக உள்ளது. 2036-ம் ஆண்டு அது 60 சதவீதமாக உயரும்.

ஒவ்வொரு நகரத்துக்கும் குடிநீர் சமநிலை திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து நகர மக்களுக்கும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்குகள் அமைக்கப்படும். அனைத்து பெரிய நரங்களிலும் நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும்.

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலைத்திட்டம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் சென்னைக்கு மறுவடிவம் அளிக்கப்படும். தற்போது, தமிழகத்தில் 4.2 கோடி மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1900 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் 53 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

கிராமப்புறங்களைப் போன்று நகர்ப்புறங்களிலும் இந்த ஆண்டு ரூ.100 கோடியில் 100 நாள் திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் இது செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story