போக்குவரத்து துறைக்கு ‘பட்ஜெட்டில்' எவ்வளவு நிதி? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


போக்குவரத்து துறைக்கு ‘பட்ஜெட்டில் எவ்வளவு நிதி? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 26 Aug 2021 11:19 PM GMT (Updated: 26 Aug 2021 11:19 PM GMT)

தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில், பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பஸ்களை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பஸ்களை கொள்முதல் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு தடை விதித்தது.

நிதி நெருக்கடி

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல், “மொத்த கொள்முதலில், 10 சதவீத பஸ்கள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது” என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், “மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படியும், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படியும், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பஸ்கள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனாலும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் தமிழக அரசு உதவி கோரியுள்ளது” என்று கூறினார்.

திட்ட அறிக்கை

இதையடுத்து நீதிபதிகள், “தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகளுடனான பஸ்களின் விலை எவ்வளவு? அந்த பஸ்கள் கொள்முதல் செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். இந்த வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல், 3-ம் பாலினத்தவருக்கும் செய்து கொடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story