புரசைவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம்; மாதவரம்- சிறுசேரி இடையே 2026-ல் இயக்க திட்டம்


புரசைவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம்; மாதவரம்- சிறுசேரி இடையே 2026-ல் இயக்க திட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2021 10:03 PM GMT (Updated: 5 Sep 2021 10:03 PM GMT)

புரசைவாக்கத்தில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைப்பதற்காக சாலையில் அதிர்வுகள் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாதவரம்- சிறுசேரி சிப்காட்
சென்னையில் 2 வழிப்பாதைகளை தொடர்ந்து 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் தொடங்கி உள்ளது. குறிப்பாக 3-வது வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 19.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையிலும், 26.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல்மட்டப்பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் மொத்தம் 30 ரெயில் நிலையங்கள் வர உள்ளன.இதன் பயனாக மாதவரம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, செம்மஞ்சேரி, சிறுசேரி சிப்காட் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

அதிர்வுகள் சோதனை
இந்தப்பாதையில், மாதவரம் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சிறுசேரி வரை உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்படுகிறது. தற்போது வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள புரசைவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாலையின் நடுவில் சுரங்கப்பாதை அமைக்கும் போது அதிர்வுகள் எவ்வளவு தூரத்திற்கு இருக்கும்?, பழைய கட்டிடங்கள் எத்தனை உள்ளன? இதனால் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடங்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நவீன கருவிகளுடன் அதிர்வு ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் பணிகள்
இந்தப்பணியில் சாலையின் நடுவில் இருக்கும் போக்குவரத்து தடுப்புகளில் இருந்து இரண்டு பகுதியிலும் 60 மீட்டர் வரை எவ்வளவு அதிர்வு இருக்கும்? என்று அறிந்து கொள்வதற்காக இந்தப்பணி நடக்கிறது. 2 வாரங்களில் இந்தப்பணி முடிந்த உடன், பூமிக்கடியில் செல்லும் மின்சார வயர்கள், கழிவுநீர் கட்டமைப்புகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை மாற்றி அமைப்பதற்காக முதல் கட்டமாக இந்தப்பகுதியில் பூமிக்கடியில் என்னென்ன இணைப்புகள் இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படுகிறது.அதனை தொடர்ந்து அவற்றை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதேபோல் ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட தேவையில்லாத அஸ்திவார கட்டமைப்புகள் அப்புறப்படுத்தப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை தோண்டும் டணல் போரிங் எந்திரம் பூமிக்கடியில் இறக்கப்பட்டு சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கும். சுரங்கம் தோண்டும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.

ரெயில் நிலையங்கள்
மாதவரம் பால் பண்ணை, தபால் பெட்டி, முராரி ஆஸ்பத்திரி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி, சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங்ரோடு சந்திப்பு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை மெட்ரோ, அடையாறு சந்திப்பு, அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர் மெட்ரோ, தரமணி இணைப்பு சாலை ஆகிய இடங்கள் வழியாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. அத்துடன் இந்த இடங்களில் எல்லாம் ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

புதுமையான அனுபவம்
மாதவரம்- சிறுசேரி வழித்தட பாதையில் 2026-ம் ஆண்டு ரெயில்களை ஓட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்ததும் அங்கு டிரைவர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரெயில் ஓட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் அதிநவீன சாப்ட்வேர் மற்றும் சிக்னல் வசதி, 16 கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு இயக்கப்படும்.இதற்காக 254 நவீன மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தட பாதையில் தினசரி 45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள், பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரெயில் புதுமையான அனுபவத்தைத் தரும்.

மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story