மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 7 Sep 2021 10:46 PM GMT (Updated: 7 Sep 2021 10:46 PM GMT)

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் இல்லை
சென்னை சைதாப்பேட்டை ரெட்டிக்குப்பம் சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் ரூ.13 லட்சம் மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 44 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் மொத்தமாக 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 627 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 54 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் இல்லை.

சுழற்சி முறையில் பரிசோதனை
வருகிற 12-ந் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கக்கப்பட்டுள்ளதால், கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்துத்தான் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது.எந்தெந்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதோ, அந்த பள்ளிகளுக்கு சீல் வைத்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கடுமையான நடவடிக்கை
17 முதல் 18 வயதுக்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. போலி மருத்துவத்தையும், போலி டாக்டர்களையும், போலி மருந்துகளையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இவை கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story