தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:36 PM GMT (Updated: 11 Sep 2021 9:36 PM GMT)

தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இத்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து சாலை மார்க்கமாக வருகிறவர்கள் 2 ‘டோஸ்’ தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 48 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோல் கேரளா எல்லையில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யவும் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்தவகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,600-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முக்கிய ஆயுதமான தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

40 ஆயிரம் மையங்கள்
இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் 10 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த முதலில் திட்டமிட்டோம். தற்போது தமிழகத்தில் 40 ஆயிரம் போலியோ தடுப்பு மருத்து போடும் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் நாளை (இன்று) கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் சிறப்பு முகாம்கள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story