மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி


மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 11 Sep 2021 11:38 PM GMT (Updated: 11 Sep 2021 11:38 PM GMT)

தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மின்சார கணக்கெடுப்பு பணிக்கு 50 சதவீத ஊழியர்களே உள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஆய்வுக்கூட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின்சாரத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். விவசாயிகளின் அரசு என்று கூறிவந்த கடந்த கால அரசு விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து உள்ளது.

காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, இந்த ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சூரிய மின் உற்பத்தி மாவட்டம் தோறும் இருக்கும் இடங்களை அறிந்து, அந்தந்த மாவட்டங்களிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம் மின் இழப்புகளை தவிர்க்க முடியும். சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கும் பணியாளர்களை வைத்துதான் மின்சார வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப விரைவில் நிரப்பப்படும்.

நிலக்கரி இருப்பு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத்துறை செயல்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. அந்த அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கு 2 லட்சத்து 38 டன், தூத்துக்குடியில் 71 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முறையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்த பின்னர் யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பு பணி
வீடுகளுக்கு மின்சார கணக்கெடுப்பு பணிக்கு 50 சதவீத பணியாளர்கள் குறைவாக உள்ளனர். இதனால் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்துறை குறித்து புகார் தெரிவிக்க 107 எண் இருந்தது. ஒருவர் வீடு, தோட்டம், தொழில் என இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்களை வைத்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக மின்னகம் சேவை மையம் தொடங்கப்பட்டு 9498794987 என்ற ஒரே எண் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த புகார்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சம் புகார்கள் வரப்பெற்று 97 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

கூடங்குளம்
கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story