முறையான பயிற்சி அளித்திருந்தால் மாணவரின் தற்கொலையை தடுத்திருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை


முறையான பயிற்சி அளித்திருந்தால் மாணவரின் தற்கொலையை தடுத்திருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2021 9:16 PM GMT (Updated: 12 Sep 2021 9:16 PM GMT)

‘நீட்’ தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்தி, மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து இருந்தால் தற்கொலையை தடுத்திருக்கலாம் என்றும், மாணவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே ‘நீட்’ தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. ‘நீட்’டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இப்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணி தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் அ.தி.மு.க. அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி, தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

நான் கடந்த ஜூன் மாதம் சட்டசபையில், ‘நீட்’ தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மழுப்பலான பதிலை அளித்தார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தே ‘நீட்’டிற்கு எதிரானதுதான் என்று மாணவர்களை வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவரை ‘நீட்’டிற்கு தாரை வார்த்துள்ளோம்.

சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பேச்சை நம்பி, இந்த முறை ‘நீட்’ தேர்விற்கு முழுமையாக தயாராகாமல், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலையும், மனவருத்தமும் அடைந்துள்ளேன். தமிழக மக்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா?, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்கு சரியான பதிலை கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால், ‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், நாளை (இன்று) சட்டசபையில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து இந்த அரசு தீர்மானம் கொண்டுவரப்போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நாங்கள் ‘நீட்’ தேர்வு உள்பட தமிழகத்தை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும், எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம்.

உங்களைப்போல் நாங்கள் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனியாவது மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்துங்கள். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story