தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல சட்டமன்ற முதல் தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்


தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல சட்டமன்ற முதல் தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2021 10:57 PM GMT (Updated: 14 Sep 2021 10:57 PM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல சட்டமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிராக விலக்கு பெறுவதற்கு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று சொன்னதாக சட்டசபையில் தெரிவித்தார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போலவே முதல் கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவு கூடுதலான வலுவான சட்ட விதிகளுடன் இருக்கிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சட்டமுன்வடிவுக்கும், இப்போது அனுப்பப்பட்டுள்ள முன்வடிவுக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு உரிய தரவுகளுடன் சரியாக ஆராயாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவாகும்.

கடந்த சட்டமுன்வடிவுக்கும், இதற்குமான வித்தியாசம் 86 ஆயிரத்து 342 பேருடைய கருத்துருக்கள், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் கருத்துக்கள், அவர்கள் தந்த கருத்துக்களுக்கு பிறகு அவற்றை ஆராய்வதற்கு சட்டநிபுணர்கள் குழுவின் கருத்துக்கள், இதையும் கடந்து தலைமைச்செயலாளர் தலைமையில் செயலாளர் குழு கூடி விவாதித்து எடுத்த முடிவுகள் இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்துத்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கிறது.

கவர்னரிடம் கையெழுத்தாகி வந்தவுடன், இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். முதல்-அமைச்சர், ஜனாதிபதியை சந்தித்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு தேவையான அழுத்தத்தை கொடுப்பார். அது நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story