கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை ஜப்தி செய்தபோது முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி சீல் வைத்த நிதி நிறுவனத்தினர்


கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை ஜப்தி செய்தபோது முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி சீல் வைத்த நிதி நிறுவனத்தினர்
x
தினத்தந்தி 16 Sep 2021 8:58 PM GMT (Updated: 16 Sep 2021 8:58 PM GMT)

கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை ஜப்தி செய்தபோது வீட்டுக்குள் முதியவரை வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் புருஷோத்தமன் (வயது 66) என்பவர் ரூ.3 லட்சம் ஒத்திக்கு கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். கட்டிடத்தின் உரிமையாளர் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் தவணை தொகை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் கோர்ட்டு மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். தவணை தொகை செலுத்த நேற்றுடன் காலஅவகாசம் முடிவடைந்ததால், கடனை திருப்பி செலுத்தமுடியாத வீட்டின் உரிமையாளர், நிதி நிறுவனத்தினரிடம் எனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். ஆனால் கட்டிட உரிமையாளர் நிதி நிறுவனத்தினரிடம், வீட்டின் முதல் மாடியை ஒத்திக்கு வைத்துள்ளதையும், அவருக்கு பணம் தரப்பட வேண்டும் என்ற விவரத்தையும் தெரிவிக்காமல் சென்றுள்ளார்.

முதியவரை வீட்டுக்கு வைத்து பூட்டினர்

இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவனத்தினர், முதல் தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன் தூங்கிகொண்டிருந்ததை அறியாமல் வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்து விட்டு சென்றனர். நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் வீட்டிற்கு வந்த புருஷோத்தமனின் மகன் சதீஷ் தனது தந்தையை வீட்டில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சதீஷ் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டின் மாடியில் இருந்த புருஷோத்தமனுக்கு உணவு வழங்கினர். பின்னர் நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், மாடியில் ஆள் இருந்தது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் மீட்டனர்

இதையடுத்து உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டதும், நாகை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் நிதி நிறுவனத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் ‘சீலை’ நீக்கி புருஷோத்தமனை மீட்டனர்.

Next Story