ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. - அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. - அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Sep 2021 11:58 PM GMT (Updated: 19 Sep 2021 11:58 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

22-ந்தேதி நிறைவு பெறுகிறது

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 626 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு அக்டோபர் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இரண்டுக்கும் சேர்த்து வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும்.

தி.மு.க.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. பிரதான கட்சியான தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியுள்ளது. பொதுவாகவே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு மாவட்ட அளவிலேயே நடப்பது வழக்கம்.

அந்த அடிப்படையில் தி.மு.க. மாவட்ட செயாளர்கள் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி தலைமையிடம் கலந்து பேசி தயாரித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தல்படி இடங்களை பகிர்ந்து கொடுக்கும் பணியிலும் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை தாங்கள் போட்டியிட விரும்பும் வார்டுகள் குறித்த பட்டியலை தி.மு.க. மாவட்ட செயலாளர் களிடம் வழங்கியுள்ளனர்.

அ.தி.மு.க. - பா.ஜ.க.பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து தங்களது கூட்டணியில் உள்ள பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் வார்டு பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணியும் பா.ஜ.க. சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டணி கட்சிகளுக்கு சுமுகமான முறையில் இடங்களை பிரித்து கொடுக்க தி.மு.க., அ.தி.மு.க. மேலிடங்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி

தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகளை காட்டிலும் சுயேச்சைகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க இருக்கிறது.

Next Story