ரூ.40 கோடி கடன் உள்ளது; ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ.5 லட்சம் தான் கே.சி.வீரமணி பேட்டி


ரூ.40 கோடி கடன் உள்ளது; ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ.5 லட்சம் தான் கே.சி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 20 Sep 2021 8:07 PM GMT (Updated: 20 Sep 2021 8:07 PM GMT)

தனக்கு ரூ.40 கோடி கடன் இருப்பதாகவும், தன்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரின்விலை ரூ.5 லட்சம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூர்,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக வேலூர் லஞ்சஒழிப்பு போலீசார் கடந்த 15-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து 16-ந் தேதி கே.சி.வீரமணி வீடு, கல்லூரி உள்பட அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் வீடு என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கணக்கு காட்டியிருக்கிறேன்

லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததாக தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. என்னிடம் இருந்து 2 ஆயிரத்து 746 கிராம் தங்க நகைகள், அதாவது சுமார் 300 பவுன், 2,508 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்), ரொக்கப்பணமாக 10 ரூபாய்க் கட்டு ஒன்று (ரூ.1,000), இதுதவிர 4 ஆயிரத்து 600 ரூபாய் என மொத்தம் ரூ.5,600 மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

நான் தேர்தலில் போட்டியிட்டபோது 300 பவுனுக்கும் அதிகமாக நகைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு என்னுடைய நகைகள் என்னிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனது மகள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க இருக்கிறார். அவர் வசதிக்காக அமெரிக்க டாலர்கள் வாங்கி வைத்திருந்தேன்.

ரூ.40 கோடி கடன்

நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே பென்ஸ் கார் வைத்திருந்தேன். என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அது பழமையான கார். ரூ.5 லட்சம் மதிப்புடையது. எனக்கு ரூ.40 கோடி கடன் உள்ளது. கார்கள் மீதுதான் பிரியமே தவிர மற்றபடி எதுவும் என்னிடம் இல்லை. திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மை இதுதான். என் மீதான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.

Next Story