பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கூண்டோடு இடமாற்றம் அரசு அறிவிப்பு


பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கூண்டோடு இடமாற்றம் அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 10:24 PM GMT (Updated: 23 Sep 2021 10:24 PM GMT)

பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை,

பள்ளிக்கல்வி துறையில் சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பலர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பள்ளிக்கல்வி துறையில் 8 இயக்குனர்கள், 18 இணை இயக்குனர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குனராகவும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த மு.பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருந்த எஸ்.சேதுராமவர்மா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனராகவும், அரசு தேர்வுகள் இயக்குனராக இருந்த சி.உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடநூல் கழக செயலாளராக கண்ணப்பன்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குனர்-2 பதவியில் இருந்த பெ.குப்புசாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர்-1 பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் எஸ்.நாகராஜமுருகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குனராகவும், அதே திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குனர்-1-ல் இருந்த ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

18 இணை இயக்குனர்கள்...

பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் தொழிற்கல்வி பிரிவில் இணை இயக்குனராக இருந்த பூ.ஆ.நரேஷ், பணியாளர் தொகுதி பிரிவில் இணை இயக்குனராகவும், தொடக்கக்கல்வி இணை இயக்குனர் நா.ஆனந்தி, மெட்ரிகுலேசன் பளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனராகவும் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

இவர்களை போல, எஸ்.சுகன்யா, பி.பொன்னையா, பி.குமார், கே.செல்வகுமார், எஸ்.சாந்தி, கே.சசிகலா, ஆர்.பாஸ்கரசேதுபதி, எஸ்.உமா, எம்.வாசு, த.ராஜேந்திரன், வை.குமார், கே.ஸ்ரீதேவி, வே.ஜெயக்குமார், சி.அமுதவல்லி, எம்.ராமசாமி, ச.கோபிதாஸ் உள்பட மொத்தம் 18 இணை இயக்குனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் அரசின் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வித்துறையின் கீழ்வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர் அதே பதவியில் நீடிக்கிறார்.

Next Story