உள்ளாட்சி தேர்தலுக்கு துணை ராணுவ பாதுகாப்பு: அ.தி.மு.க. கோரிக்கையை 29-ந்தேதிக்குள் பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும்


உள்ளாட்சி தேர்தலுக்கு துணை ராணுவ பாதுகாப்பு: அ.தி.மு.க. கோரிக்கையை 29-ந்தேதிக்குள் பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Sep 2021 8:11 PM GMT (Updated: 24 Sep 2021 8:11 PM GMT)

9 மாவட்டங்களுக்கு நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலுக்கு துணை ராணுவ பாதுகாப்பு, வெளிமாநில அதிகாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அ.தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலித்து 29-ந்தேதிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வன்முறை

காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த தேவையில்லை. இவ்வாறு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தும்போது, கள்ளஓட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட வாய்ப்புள்ளது.

துணை ராணுவ பாதுகாப்பு

எனவே, உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த, மத்திய அரசு மற்றும் வெளிமாநில அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். வாக்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவ வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை அமல்படுத்தவும் வேண்டும் என்று கடந்த 14-ந்தேதி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை.

பரிசீலிக்க வேண்டும்

எனவே கோரிக்கை மனுவை பரிசீலித்து, உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தகுந்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையத்துக்கு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இதுபோல வெளிமாநில பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டார்களா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வக்கீல், ‘அப்போதும் ஐகோர்ட்டு உத்தரவின்படி, தேர்தல் நடத்தப்பட்டது’ என்று பதில் அளித்தார்.

நியாயமான தேர்தல்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘14 ஆயிரத்து 900 வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலின்போது 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் ஆகும். மாநிலத்தில் பிரதான கட்சியான அ.தி.மு.க. அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மனுதாரருக்கு வருகிற 29-ந்தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story