பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு சாமானிய மக்களின் சிரமங்கள் தெரியாது - வைகோ பேட்டி


பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு சாமானிய மக்களின் சிரமங்கள் தெரியாது - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 27 Sep 2021 9:24 PM GMT (Updated: 27 Sep 2021 9:24 PM GMT)

மத்திய அரசு, சாமானிய மக்கள் நடுத்தர மாதாந்திர ஊழியர்களின் கஷ்டங்களை நினைத்து பார்ப்பதில்லை என்று வைகோ கூறினார்.

மதுரை,

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, வாக்களிக்காத மக்களின் நன் மதிப்பையும் பெற்று விட்டார். முதன்முதலில் மதுரையில் நாளிதழ் தொடங்கி சாமானிய மக்களுக்கு உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை வழங்கிய தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை போற்றி வணங்குகின்றேன். 

7 பேர் விடுதலை குறித்து முன்னாள் கவர்னரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டது. தற்போது வந்துள்ள புதிய கவர்னர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை என கூறியுள்ளது. தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு, சாமானிய மக்கள் நடுத்தர மாதாந்திர ஊழியர்களின் கஷ்டங்களை நினைத்து பார்ப்பதில்லை. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனை ஏழை, எளிய மக்கள் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர்.எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story