9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது


9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 6 Oct 2021 1:36 AM GMT (Updated: 6 Oct 2021 4:11 AM GMT)

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங் களில் இன்றும் (புதன்கிழமை), 9-ந் தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வழக்கு காரணமாக காஞ்சீ புரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி இடத்துக்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த இடங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் ஒரு வாக்காளர், கிராம ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் என 4 பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்ய ஓட்டு போடவேண்டும்.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Next Story