மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை


மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 12 Oct 2021 11:03 PM GMT (Updated: 12 Oct 2021 11:03 PM GMT)

மாவோ பயங்கரவாதிகள் தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

மாவோ பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஓரளவு தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், கேரளாவில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கேரளாவில் நீலாம்பூர் காட்டுப்பகுதியில் மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. அதுபற்றி கேரள போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்கள். இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் நபர்களை என்.ஐ.ஏ. போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

3 மாநிலங்களில் சோதனை

சென்னை உள்பட தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ. போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். மாவோ பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அம்பத்தூர், வில்லிவாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் சோதனை நடந்ததாக தகவல் வெளியானது. இதுபோல கோவையில் 3 இடங்கள், கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சேலம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 இடங்கள், கேரளாவில் 3 இடங்களிலும் சோதனை வேட்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை பற்றி என்.ஐ.ஏ. தரப்பில் இதுவரை எந்த விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் சோதனை நடப்பதை மட்டும் உறுதிபடுத்தி உள்ளனர்.

Next Story