மாநில முதல்-மந்திரிகளுக்கு அண்ணாமலை கடிதம் - ‘பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற வேண்டும்'


மாநில முதல்-மந்திரிகளுக்கு அண்ணாமலை கடிதம் - ‘பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற வேண்டும்
x
தினத்தந்தி 16 Oct 2021 9:11 PM GMT (Updated: 16 Oct 2021 9:11 PM GMT)

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி ஆதரவளித்து லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை,

பட்டாசு தொழிலானது நேரிடையாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோருக்கு வாழ்வு அளித்து வருகிறது. தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தியிலும், 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு வினியோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழிலானது தமிழகத்தில் தென்மாவட்டங்களின் வாழ்வாதாரம் ஆகும்.

இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுகள் என்பது அனைத்து மத திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், தனிநபர் விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அனைத்து சமூகத்திலும் பங்கு வகிக்கிறது.

தீபாவளி பண்டிகை மிக விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இது தேசம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகும். பட்டாசு வெடித்தல் என்பது இந்த பண்டிகையின் ஒரு அங்கமாகும். கொரோனா பாதிப்பில் இருந்து தேசம் மீண்டெழுகிறது. இந்தநிலையில் மக்களை உற்சாகப்படுத்தி, பாதிப்பு மனநிலையில் இருந்து மீட்டெடுத்து, உற்சாகத்தை அளிக்கவும், நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களின்படியும், நமது மாநிலத்தில் பட்டாசு பயன்படுத்தி பெரும்பான்மையான மக்கள் கொண்டாடி மகிழ எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் மக்கள் மீண்டும் எழுச்சி பெற உதவ வேண்டும்.

தீபாவளியன்று பட்டாசு வெடித்து உற்சாகம் பெறும் விதமாக நம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி ஆதரவை நல்கி, தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் வாழ்வில் தீப ஒளி ஏற்றி, அவர்களுடைய வாழ்வு சிறக்க தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலியுறுத்தி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்திட முடிந்தவரை இடையூறுகள் இல்லாத வண்ணம் உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story