‘தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை' டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி


‘தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 8:10 PM GMT (Updated: 17 Oct 2021 8:10 PM GMT)

‘தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை' என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை வரை அரசு மூலம் 5 கோடியே 6 லட்சம் பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் 25 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 5 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3-வது அலை

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது வரை சுமார் 56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தில் 67 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 27 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். 2 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு மத்திய பொருளாதார குழு அறிக்கை கிடைத்தவுடன், மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு மருந்துகள் கிடைத்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் இல்லை. தற்போது வரை 381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story