தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்: ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது


தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்: ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது
x
தினத்தந்தி 17 Oct 2021 9:25 PM GMT (Updated: 17 Oct 2021 9:25 PM GMT)

தனுஷ்கோடி பகுதியில் நேற்றும் கடல் சீ்ற்றம் தொடர்ந்தது. ராமேசுவரத்தில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது. இதனால் மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.

ராமேசுவரம்,

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் கடல் உள்வாங்கியது. ராமேசுவரம் பகுதியில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனிடையே ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்றும் பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால்‌ சிறிய மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.

அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் 2-வது நாளாக நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்தது. குறிப்பாக தனுஷ்கோடி கம்பிப்பாடு-அரிச்சல்முனை இடையேயான தென் கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது.

சாலை வரை வந்த தண்ணீர்

இதனால் கடல் அலைகள் தடுப்பு சுவரில் மோதி, கடல் நீரானது சாலை வரையிலும் வந்து சென்றது. கடல் சீற்றமாக இருப்பது தெரிந்தும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் தடுப்பு சுவரின் மிக அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதும், செல்பி எடுப்பதுமாக இருந்தனர்.

எம்.ஆர்.சத்திரம் துறைமுக பகுதியிலும் கடல் சீற்றமாக இருந்ததுடன் துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்திற்கு மேல் நோக்கி சீறி எழுந்த கடல் அலைகளை, சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்தனர்.

மீன்பிடிக்க தடை

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 400-க்கும் அதிகமான நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

Next Story