இடஒதுக்கீடு சமூகநீதியை பாதுகாக்க - அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது


இடஒதுக்கீடு சமூகநீதியை பாதுகாக்க - அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது
x
தினத்தந்தி 5 Nov 2021 11:12 PM GMT (Updated: 5 Nov 2021 11:12 PM GMT)

இடஒதுக்கீடு சமூகநீதியை பாதுகாக்க - அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடு சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீடுகளுக்கும் ஆதாரம் அம்பாசங்கர் ஆணைய அறிக்கை தான். ஆனால், அதை செல்லாததாக்க சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு முயல்கிறது. இது தான் ஒட்டுமொத்த சமூகநீதிக்கும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இடஒதுக்கீட்டு பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான். அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்.

தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூகநீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப்போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story