மாநில செய்திகள்

சென்னையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி + "||" + In Chennai, the public suffers from rainwater accumulation in low-lying residential areas

சென்னையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

சென்னையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
சென்னையில் பெய்த பெருமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை உடைத்துப்போட்டுள்ளது. நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதை மெய்ப்பிக்கும் விதமாகவே கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது.


ஆனால் ‘இப்படிப்பட்ட மழையை எதிர்பார்க்கவில்லை' என்று மக்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. பொதுவாகவே தலைநகரை குறிவைத்து தாக்கும் மழை இந்த முறையும் தனது வலிமையை உணரச் செய்து இருக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து, சென்னை வெள்ளக்காடாய் போனது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் அவென்யூ பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஸ்கூல் ரோடு மழை நீர் சூழ்ந்து ஏரி போல காட்சி அளிக்கிறது. சென்னை திருவொற்றியூர் வெற்றி நகர், பாலாஜி நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னை கொளத்தூர் செல்வி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வீடுகளுக்குள்ளும் எட்டிபார்த்து இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இதேபோல மந்தைவெளி, கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு போன்ற வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் சிரமம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. காய்கறி-பழ கழிவுகளுடன் மழைநீரும் சேர்ந்ததால் மார்க்கெட் வளாகமே சகதி காடாக மாறியது. வணிகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டபடியே மார்க்கெட்டுக்கு சென்று வர வேண்டியதாக இருந்தது. வேளச்சேரி ராம்நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. ராம்நகரில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கிறது.

சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் சூழ்ந்தது. இதையொட்டி தெப்பம் போல தேங்கிய மழை நீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக கையாளப்பட்டது. அதேபோல இ.எஸ்.ஐ. ஊனமுற்றோர் ஆஸ்பத்திரி வளாகம் மழைநீரால் சூழப்பட்டது. மழைநீரை வெளியேற்றும் பணி மும்மரமாக நடந்தாலும் மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நுழைவாயிலில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மழைநீரை அகற்றும் பணி மும்முரம்

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கோவில் தெப்பக்குளங்கள் இவையெல்லாம் தாண்டி நகரில் உள்ள பல பஸ் நிறுத்தங்கள் மழை நீரால் சூழப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவித்து போனார்கள். இதனால் மழைநீரில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பல இடங்களில் பஸ் நிறுத்தங்களை தாண்டியும், மெயின் ரோடுகளிலும் பஸ்களுக்காக காத்திருக்கும் நிலை காணப்பட்டது.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியம், தீயணைப்பு-மீட்புத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகளில் இருந்து கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணி சவாலாக அமைந்தது. இருந்தாலும் நேற்று மழைநீர் அகற்றும் பணி தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டது.

நிவாரண முகாம்களில் ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் 200-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள வரதராஜபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கே தங்கியுள்ள மக்களிடம் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளை தங்கு தடையின்றி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்.ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நிவாரண முகாமில் வழங்கப்படும் உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நிவாரண மையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதாசிவம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுபோல அனைத்து நிவாரண முகாம்களிலும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கனமழை தொடரும்

சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்கிய மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டியது. அதன் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சில இடங்களில் அதி கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்ற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசான காரை தட்டிச்சென்ற முரட்டுக்காளையை பார்க்க திரண்ட பொதுமக்கள்
முதல் பரிசான காரை தட்டிச்சென்ற முரட்டுக்காளையை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.
2. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி பொதுமக்கள் பெருமிதம்
தலைப்பொங்கலுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்குவது போன்று, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று சென்னையில் பெண்கள் கூறி பெருமிதம் அடைந்தனர்.
3. பொதுமக்கள், வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும் என்று ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கூறினார்.
5. சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி.