மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை


மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2021 10:13 PM GMT (Updated: 12 Nov 2021 10:13 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெய்ததால் சில இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நிவாரணப் பணி தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நோய் கண்காணிப்பு நடவடிக்கை

இந்த கூட்டத்தில், சென்னையில் 750 முகாம்களும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில் எஞ்சிய 4,250 முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருத்துவ சேவை வழங்கப்படும்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை நோய்கள், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் நோய் குறித்த விழிப்புணர்வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், புகை தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசித்து தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளும் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

போன் எண்கள்

டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவை, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ள இடமாகும். அவற்றை தவிர்க்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தில் செயல்படும் தொற்றுநோய் கண்காணிப்புக்கான தொலைபேசி எண்கள் 044-29510400, 044-29510500 மற்றும் கைபேசி எண்கள் 9444340496, 8754448477 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story