முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை இணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கம்


முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை இணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2021 11:34 PM GMT (Updated: 14 Nov 2021 11:34 PM GMT)

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் உள்ளிட்ட துறைகளை இணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின்கீழ் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள் ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் செயல்படுவார்கள்.

பொதுக்குறை தீர்வு அலுவலர் பதவி

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின், ஒரு முதன்மை பொதுக்குறை தீர்வு அலுவலர் பதவி ‘முதல்வரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது. ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள் இனி ‘முதல்வரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.

ஒரு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் பதவி மட்டும் மேம்படுத்தப்பட்டு ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர் நிலையில் ஓர் அலுவலர் நியமிக்கப்படுவார். அவருடைய நிலைக்கு ஏற்ப அனைத்து சலுகைகள் வழங்கப்படும். பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் 6 பணியிடங்களுக்கு தேவைப்படும் ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மாநகர ஈட்டுப்படி, இதர படிகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள ஆணைகளுக்கு இணங்க வழங்கப்படும். இச்செலவு, பொதுத்துறை வாயிலாக சம்பந்தப்பட்ட கணக்குத்தலைப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

மின் ஆளுமை முகமை

பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில் ‘முதல்வரின் முகவரி’ துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்புத் துறையாக பொதுத்துறை (நிர்வாகம்-4) செயல்படும்.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்கு தீர்வு காண மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதளமுகப்பாக பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஷில்பா பிரபாகர் சதீஷ்

தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண், மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் இயங்கும்.

இந்த இணையதளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார். llPGCMS இணையதள முகப்பு, cmhelpline பராமரிப்பு தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் பொதுத்துறையால் மேற்கொள்ளப்படும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story