பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு


பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 10:57 PM GMT (Updated: 15 Nov 2021 10:57 PM GMT)

பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை அரசு கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இவை அனைத்தும் பா.ம.க.வின் வெற்றிகள் ஆகும்.

பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முற்றிலும் விலகிவிட்டதாக நான் கருதவில்லை. பின்னாளில் ஏதேனும் புதிய பெயரில் அந்த நிறுவனங்கள் காவிரி படுகைக்குள் நுழையக்கூடும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்பதை பயன்படுத்தி, அந்த நிறுவனங்கள் பின்னாளில் தங்களின் திட்டத்திற்கு ஒப்புதல் பெறக்கூடும்.

இதைத் தடுக்கும் வகையில், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் 2-வது அட்டவணையில் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து தொழில்களையும் சேர்க்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story