2 விலைகளில் வலிமை சிமெண்ட் விற்பனை; அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


2 விலைகளில் வலிமை சிமெண்ட் விற்பனை; அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2021 8:41 AM GMT (Updated: 16 Nov 2021 8:41 AM GMT)

தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்படும் வலிமை சிமெண்ட் 2 விலைகளில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியில் கூறியுள்ளார்.



சென்னை,

தமிழக அரசின், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட் இன்று முதல் வலிமை சிமெண்ட் எனும் பெயரில் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் சிமெண்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  “வலிமை” சிமெண்ட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம்  செய்து வைத்தார்.  தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை சிமெண்ட், ஒரு மூட்டை 360 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது.

வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு இந்த சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிமெண்ட் குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் உருவாகி உள்ளது. சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பேட்டியில், அரசின் சார்பில் தயாரிக்கப்படும் வலிமை சிமெண்ட் 2 விலைகளில் விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார்.

தமிழக அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது.  வலிமை சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் ரூ.350 மற்றும் ரூ.365 ஆகிய விலைகளில் கிடைக்கும்.  வலிமை சிமெண்ட் வெளிச்சந்தையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story