மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு


மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 18 Nov 2021 2:58 PM GMT (Updated: 18 Nov 2021 2:58 PM GMT)

தமிழக அரசு மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியதும், அதனை கட்டுப்படுத்தும் பணியில் அரசின் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதன்படி, மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மிக அதிக அளவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களன் உடல்களை அடக்கம் செய்வதில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் பணியாற்றியவர்கள் மயான பணியாளர்கள்.

இந்த நிலையில், மயான பணியாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இதன்படி அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் ஆணைப்படி, மயான பணியாளர்கள் மத்திய அரசின் முன்கள பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயான பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story