தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி- பொது சுகாதார சட்டத்தில் திருத்தம்


தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி- பொது சுகாதார சட்டத்தில் திருத்தம்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:54 PM GMT (Updated: 19 Nov 2021 2:54 PM GMT)

மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்கு தடுப்பூசி  செலுத்தி வருகிறது. தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.  18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி  அளிக்கப்படும் என தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

*தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் உறுதி செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய  வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.  

*மக்கள் கூடும்  இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

*திரையரங்குகள், இதர பொழுது போக்கு இடங்கள், விளையாட்டு மைதாங்களில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story