அடுத்த கல்வியாண்டில் புதிய அரசு கலை கல்லூரிகள் தொடக்கம்- அரசாணை வெளியீடு


அடுத்த கல்வியாண்டில் புதிய அரசு கலை கல்லூரிகள் தொடக்கம்- அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 20 Nov 2021 2:33 PM GMT (Updated: 20 Nov 2021 2:33 PM GMT)

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

சென்னை

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

சட்டசபை கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் போது, 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் திருச்சுழி(திருப்பூர்), திருக்கோவிலூர்(கள்ளக்குறிச்சி), தாளவாடி(ஈரோடு), ஒட்டன்சத்திரம்(திண்டுக்கல்), மானூர்(திருநெல்வேலி), தாராபுரம்(திருப்பூர்), ஏரியூர்(தர்மபுரி), ஆலங்குடி(புதுக்கோட்டை), சேர்க்காடு(வேலூர்), கூத்தாநல்லூர்(திருவாரூர்) ஆகிய 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

அதன்படி, கல்லூரிக்கல்வி இயக்குனர் அனுப்பிய கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில்(2022-23) 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (கூத்தநல்லூரில் மட்டும் மகளிர் கல்லூரி, மற்ற 9 இடங்களிலும் இரு பாலர் கல்லூரிகள்) தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலை தமிழ், ஆங்கிலம், இளமறிவியல் கணிதம், இளநிலை வணிகவியல், இளமறிவியல் கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் மற்றும் 17 ஆசிரியரல்லா பணியிடங்கள் என 170 ஆசிரியர்கள், 170 ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. இதற்கான தொடர் செலவினமாக 10 கல்லூரிகளுக்கு ரூ.ரூ.21 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 600-ம், தொடராச் செலவினமாக ரூ.3 கோடியே 60 லட்சமும் என மொத்தம் ரூ.24 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 600-க்கு நிர்வாக அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது. இரவு காவலாளர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் பெருக்குபவர் பணியிடங்கள் வெளி முகமை மூலம் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story