தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம்- 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது


தமிழகத்தில் 10-வது மெகா தடுப்பூசி முகாம்-  50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Nov 2021 6:01 AM GMT (Updated: 21 Nov 2021 6:01 AM GMT)

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை 6.20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

மெகா தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த நிலையில் 10-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (21-ந் தேதி) நடைபெற்று வருகிறது.  சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

மேலும், ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படாது எனவும், 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படும் என்றும், எனவே, 2-வது தவணைக்கான கால அவகாசம் முடிந்துள்ள 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது தமிழக அரசிடம் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.


Next Story