நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் ரூ.76 கோடியில் கருங்கல் சுவர்


நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் ரூ.76 கோடியில் கருங்கல் சுவர்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:20 PM GMT (Updated: 23 Nov 2021 10:20 PM GMT)

சென்னையில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்காக நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரங்கள் மணல் மேடுகளால் அடைப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.76 கோடி மதிப்பில் துண்டில் வளைவு போன்ற கருங்கல் சுவர் கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

பருவ மழைக்காலங்களில் சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னையில் கனமழை பெய்து மாநகரையே வெள்ளக்காடாக மாற்றுகிறது. அனைத்து பகுதிகளிலும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததுடன், அவை ஒரு சில பகுதிகளில் வடிகால்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழைநீர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது.

இந்த பாதிப்புகளை தவிர்ப்பதற்காக ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வங்க கடலில் சென்று சேருவதற்காக, மாநகரில் உள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது. ஆனால் கடல் சீற்றம் காரணமாக முகத்துவாரங்கள் முழுவதும் மணல் மேடுகளால் அடைப்பட்டு விடுகிறது. இவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொரு முகத்துவாரங்களிலும் சுமார் 10 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி இரவு பகலாக நடப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவாரம் அடைப்பை சரி செய்வதற்காக 8 பொக்லைன் எந்திரங்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பருவமழை காலங்களில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவாரம் மணல்மேடுகளால் அடைப்பு ஏற்படாமல் தடுக்க தூண்டில் வளைவு போன்று கடலுக்குள் வளைவான கல்சுவர் கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டு உள்ளது.

கடலில் 250 மீட்டருக்கு கருங்கல் சுவர்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பருவ மழைக்காலங்களில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடும் நீர் கடலில் தங்குதடையின்றி கலப்பதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் மேடுகள் அகற்றும் பணியை ஆண்டாண்டாக செய்து வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நேப்பியர் பாலம் அருகில் ரூ.76 கோடி மதிப்பில் முகத்துவாரத்தின் இரண்டு கரைகளில் இருந்து சுமார் 250 மீட்டர் நீளத்தில் ‘கிரோய்ன்’ என்று அழைக்கப்படும் தூண்டில் வளைவு போன்று வளைவாக கடலுக்குள் கருங்கற்களால் செங்குத்தாக சுவர் கட்டப்படுகிறது.

இதன் மூலம் கடல் அரிப்பு மற்றும் நீர் ஓட்டத்தை குறுக்கிட்டு வண்டல் மண் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தப்பணிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடன் வருகிற மார்ச் மாதம் பணியை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். அடுத்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாக கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு பிறகு முகத்துவாரம் மணல் மேடுகளால் அடைப்பு என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை.

மழைநீர் தங்கு தடையின்றி செல்லும்

பருவமழை என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் முகத்துவாரத்தை அடைக்கும் மணல் திட்டுக்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி வரும் காலங்களில் தேவை இருக்காது. அதற்கு செலவிடப்படும் தொகையும் மிச்சப்படுத்த முடியும்.

அதேபோல், வரும் காலங்களில் எவ்வளவு பெரிய மழை பெய்து பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், நொடிக்கு 22 ஆயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட கூவம் ஆறு வழியாக நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரம் மூலம் கடலில் மழை நீர் தங்கு தடையின்றி கலக்கிவிட முடியும். இதனால் குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story