மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன?


மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன?
x
தினத்தந்தி 26 Nov 2021 12:12 AM GMT (Updated: 26 Nov 2021 12:12 AM GMT)

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பின்படி, ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, இந்திய அரசியல் சாசனத்தின் 161-ம் பிரிவின் அடிப்படையில் வகுத்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

10 ஆண்டு நிறைவு

அந்த வகையில், 15-9-2021 அன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் (மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் உள்பட) முன்விடுதலைக்கு உகந்தவர்களாக கருதப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து முன்விடுதலைக்கு திருப்தி அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். முதலில், அந்த கைதியின் நடத்தை திருப்திகரமாக இருந்திருக்க வேண்டும். சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், முன்விடுதலைக்காக பரிசீலிக்கப்பட தகுதியற்றவராகிறார்.

என்னென்ன குற்றங்கள்?

அதன்படி, கற்பழிப்பு (ஐபிசி 376), மோசடி (467, 471), கொள்ளை (397, 398), கூட்டுக்கொள்ளை (396, 397, 398, 399, 400, 402), தீவிரவாத குற்றங்கள், மாநில அரசுக்கு எதிரான குற்றங்கள், மத, இன, மொழி சாதி, சமய விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது (153-ஏ, 153-ஏஏ, 153-பி),

சட்ட ரீதியான காவலில் இருந்து தப்பிப்பது அல்லது தப்பிக்க முயற்சிப்பது (224), போலி ரூபாய் தாள், தயாரிக்கும் எந்திரம் வைத்திருப்பது (472, 474, 489ஏ, 489பி, 489டி), பெண் கொடுமை குற்றம் (498ஏ), வரதட்சணை கொடுமையால் சாவு (304பி),

பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகார துஷ்பிரயோக குற்றங்கள், விஷப் பொருட்கள் கலந்த கள்ளச்சாராய விற்பனை, வனக் குற்றங்களில் வழக்கமாக ஈடுபட்டவர்கள், ஒரு கொலைக்கு மேல் செய்து ஏக கால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சமூக மற்றும் மத அடிப்படையிலான வன்முறை,

மேலும் நிபந்தனைகள்

மத்திய சட்டங்களான, ஊழல் தடுப்புச் சட்டம் (மத்திய சட்டம் 49), விபசார தடுப்புச் சட்டம் (104), போதைப் பொருள் சட்டங்கள், வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள கைதிகள் (தண்டனைக்கு எதிராக அப்பீல் செய்து தீர்ப்பிற்கு காத்திருப்போரைத் தவிர)

மத்திய அரசுடன் மாநில அரசு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்ள, குற்றவிசாரணை முறை சட்டப் பிரிவு 435-க்கு உட்பட்ட குற்றங்கள் ஆகியவற்றின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கத் தேவையில்லை.

முன்கூட்டியே விடுதலை பெற தகுதியிருந்தாலும், அதை அவர்கள் குடும்பத்தினர் ஏற்க வேண்டும். முன்கூட்டியே விடுதலை பெறுகிறவரின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். விடுதலை பெறுகிறவரின் குடும்பத்தினருக்கு, அவரால் பாதுகாப்பு கெடக்கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன.

20 ஆண்டுகள் நிறைவு

15-9-2021 அன்று 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவு செய்திருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் அவரையும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம்.

ஏற்கனவே முன்விடுதலைக்காக பரிசீலிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய பரிசீலிக்கலாம். ஆனாலும் சில குறிப்பிட்ட குற்றங்களை அவர்கள் செய்திருக்கக் கூடாது.

முன்கூட்டியே விடுதலை பெறுவோர், நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அரசுக்கு பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். முன்கூட்டி விடுதலையை உரிமையாக யாரும் கோர முடியாது.

கண்காணிக்க குழு

வேறு மாநில அல்லது தேசிய கோர்ட்டுகளால் தண்டனை விதிக்கப்பட்டு தமிழக சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது. இங்குள்ள கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்டு இங்குள்ள சிறையில் இருப்பவருக்கே இந்த அரசாணை பொருந்தும்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில் உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story