கோயம்பேடு சந்தையில் தக்காளி வாகனங்களுக்கு இடம் ஒதுக்காததால் சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி


கோயம்பேடு சந்தையில் தக்காளி வாகனங்களுக்கு இடம் ஒதுக்காததால் சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
x

பொதுமக்கள் நலன் கருதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏன் இதுவரை நிறைவேற்றவில்லை ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை,

கோயம்பேடு மார்க்கெட்டில், தக்காளி லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி, தக்காளியை இறக்குவதற்கு 85 சென்ட்டில் தக்காளி மைதானம் உள்ளது. இதுதான் கொரோனா அதிகம் பரவும் இடம் என்று அறிவித்து, இந்த மைதானத்தை அதிகாரிகள் மூடி விட்டனர்.

இதை எதிர்த்து தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், தற்போது தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மைதானத்தை திறந்தால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை லாரியில் கொண்டு வந்து இறக்கி, ஒரு கிலோ தக்காளியை ரூ.40-க்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், “கோயம்பேடு மார்க்கெட்டில், லாரியில் இருந்து தக்காளியை இறக்கவும், காலி தக்காளி பெட்டிகளை ஏற்றவும் ஒரு ஏக்கர் நிலத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் 4 வாரத்துக்கு அதிகாரிகள் ஒதுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில்  சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை என தக்காளி வியாபாரிகள் இன்று காலை  முறையீடு செய்து இருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் "பொதுமக்கள் நலன் கருதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏன் இதுவரை நிறைவேற்றவில்லை ? "என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story