தமிழகத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2021 11:16 PM GMT (Updated: 1 Dec 2021 11:16 PM GMT)

தமிழகத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை.

அதற்குள், அடுத்தடுத்து மழை பெய்து, மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 2-ந் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 3-ந் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

4-ந் தேதி, 5-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயல்

அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கரையை வருகிற 4-ந் தேதி காலை நெருங்கக்கூடும்.

இதன் காரணமாக 2-ந் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 3-ந் தேதி மத்திய வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

4-ந் தேதியன்று வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வந்தவாசியில் 9 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சோளிங்கரில் 7 செ.மீ., திருவண்ணாமலை, வீரபாண்டி, காட்பாடி, ஆர்.கே.பேட்டை, ஆவடியில் தலா 5 செ.மீ., சிவகாசி, அம்முண்டி, கொடைக்கானல், பவானியில் தலா 4 செ.மீ., சேரன்மகாதேவி, சாத்தூர், உசிலம்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், பெரியகுளம், குன்னூர், காவேரிப்பாக்கம், பொன்னை அணை, அவலாஞ்சி, செங்கத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story