கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு


கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 3:37 AM IST (Updated: 4 Dec 2021 1:41 PM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 4 கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.

கட்டணத்தை அரசு செலுத்தும்

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 2-ந்தேதி கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இங்கு பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. ஆகிய 4 பாடப்பிரிவுகளுடன் தற்போது, சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்பை தொடங்கிட சென்னை பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறப்பட்டது. இந்த படிப்பில் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணம் செலுத்தப்படுகிறது. வருகின்ற கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை ஆயிரத்தை தாண்டும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த கல்லூரி மூலம் மாணவ மாணவிகளின் பொருளாதார சூழ்நிலை உயரும்.

நல்ல நிலைக்கு வர வேண்டும்

இந்த கல்லூரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற இடையூறுகளை தாண்டி ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பை முறையாக கற்று மாணவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி, வைணவ கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story