அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு


அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில்  மீண்டும் மேல்முறையீடு
x
தினத்தந்தி 6 Dec 2021 11:50 AM IST (Updated: 6 Dec 2021 11:50 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இந்த தேர்தலுக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ‘ஒற்றை தலைமை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ் தான் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திட்டத்தின்படி, ‘அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ந்தேதி தேதி நடைபெறுகிறது.

சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து இருந்தது.

இந்த நிலையில் இன்று  மீண்டும் அ.தி.மு.க உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இந்த தேர்தலுக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக கருதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்குமாறு  ஜெயச்சந்திரன் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது. மனு தாக்கல் செய்தால் இந்த வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

Next Story