65-வது நினைவு தினம்: அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி


65-வது நினைவு தினம்: அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 7 Dec 2021 2:14 AM IST (Updated: 7 Dec 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சட்டமேதை அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவபடத்துக்கு டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி உள்பட தி.மு.க. எம்.பி.க்களும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தலைவர் சிவகுமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ்

சென்னை சத்தியமூர்த்திபவனில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவபடத்துக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு மேலிட பொறுப்பாளர் வெங்கடேசன் மவுரியா, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் கராத்தே ஆர்.தியாகராஜன், மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் பாலகணபதி, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலரும் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அம்பேத்கர் உருவபடத்துக்கு அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநில குழு உறுப்பினர் அ.பாக்கியம், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்பட நிர்வாகிகளும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகளும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு அக்கட்சியின் சென்னை மண்டல அமைப்பு செயலாளர் டி.மகாலிங்கம் தலைமையில் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதுபோல அம்பேத்கர் சிலைகளுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மரக்கன்று நடப்பட்டது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு சென்னை-புதுச்சேரிக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கூடுதல் கமிஷனர் சந்திரமவுலி சக்ரவர்த்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மண்டல கமிஷனர்கள் பி.ஹங்சிங், அமுதா உள்பட அதிகாரிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Next Story