மாணவியுடன் பழகுவதில் போட்டி: சக மாணவரை கூலிப்படை வைத்து தாக்கிய மாணவர்
திருவட்டார் அருகே மாணவியுடன் பழகுவதில் ஏற்பட்ட போட்டியில் ஒரு மாணவரை சக மாணவர் கூலி படை ஏவி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை வகுப்புகள் முடிந்த பின்பு மாணவ-மாணவிகள் வேர்கிளம்பி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென ஒரு மாணவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதைபார்த்த சக மாணவர்களும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அங்கு பொதுமக்கள் கூடத்தொடங்கினர். உடனே, அந்த 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
தாக்கப்பட்ட மாணவர் வேர்கிளம்பி பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் அவரது உறவினரான ஒரு மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியிடம் இறச்சகுளத்தை சேர்ந்த மற்றொரு மாணவர் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்தநிலையில் மாணவியுடன் பழகுவதில் 2 மாணவர்களுக்கும் இடைேய தகராறு ஏற்பட்டுள்ளது. இரு மாணவர்களும் மாணவியை கவரும் விதத்தில் நடந்து கொள்வதில் போட்டி நிலவியதாம்.
இதற்கிடையே இறச்சகுளம் மாணவர் மாணவியுடன் நட்பாக இருப்பதை, உறவுக்கார மாணவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் இறச்சகுளம் மாணவரை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் தன்னுடைய ஊர் நண்பர்கள் இரண்டு பேரை பணம் கொடுத்து கூலி படையாக ஏற்பாடு செய்து உறவுக்கார மாணவரை அடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மாணவர் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தபோது கூலிப்படையினர் இருவரும் வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
காயமடைந்த மாணவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடைேய இறச்சகுளம் மாணவர் தலைமறைவானார். அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் திருவட்டார் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story