கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மையம் அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு


கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மையம் அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 9:59 PM GMT (Updated: 16 Dec 2021 9:59 PM GMT)

கொடைக்கானலில் தேசிய கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் கட்ட அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏற்காட்டிற்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி மையத்தை அமைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது.

கொள்கை முடிவு

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “கொடைக்கானலில் தேசிய கூட்டுறவு பயிற்சி மையத்தை 20 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவது என அரசு கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது” என்று வாதிட்டார்.

ஆதாரம் இல்லை

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, “கொடைக்கானலி்ல் பயிற்சி மையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.

தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை. அதற்காக மாநில அளவிலான பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று வாதிட்டார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இதையடுத்து, அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறப்படும் ஆவணங்களை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கொள்கை முடிவு எடுத்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Next Story