பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: முதல் அமைச்சர் அறிவிப்பு


பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:57 PM IST (Updated: 17 Dec 2021 3:01 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளிக்கூடத்தின் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

சென்னை,

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர். காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்ல தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே 6 மாணவர்கள் காத்து நின்றனர்.

அப்போது திடீரென கழிவறையின் தடுப்பு சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் (வயது 13) மற்றும் 9-ம் வகுப்பு மாணவனான டவுனை சேர்ந்த அன்பழகன் (14) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் சஞ்சய், இசக்கி பிரகாஷ், அபுபக்கர் உள்ளிட்ட 4 பேரை பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒரு மாணவர் உயிரிழந்தார். மற்ற 3 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருநெல்வேலியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்த மாணவர்கள் 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story