ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் நிரப்பும்போது விபத்து: சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்


ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் நிரப்பும்போது விபத்து: சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Dec 2021 7:45 PM GMT (Updated: 29 Dec 2021 7:45 PM GMT)

சென்னையில் ஏ.சி.எந்திரத்தில் கியாஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் வசித்து வருபவர் அனுராதா முரளி (வயது 54). இந்த வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்ய அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன் (52) என்பவருக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 6 தொழிலாளர்கள் இந்த பணியை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஏ.சி எந்திரத்தில் கியாஸ் நிரப்பும் பணி நடந்தது. மற்றொரு புறம் ‘வெல்டிங்’ செய்யும் பணி நடந்தது. எதிர்பாராதவிதமாக வெல்டிங் செய்த இடத்தில் இருந்து வந்த தீப்பொறி, ஏ.சி. எந்திரத்தில் நிரப்பிக்கொண்டிருந்த கியாஸ் சிலிண்டர் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானது.

வலியால் அலறி துடித்தனர்

இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களின் உடலில் தீ பரவி வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்து பார்த்தபோது, வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 5 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் பலி

இந்த விபத்தில் "வெல்டர்" நசீர் (30) என்பவர் 80 சதவீதத்துக்கு மேல் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அமித் (28), ரியாஸ்சுதின் (48), அக்தர் அலி (28), தினேஷ் (36) ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் காயமின்றி உயிர் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் சி்க்கியவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story