பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.86 லட்சம் மோசடி செய்த போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.86 லட்சம் மோசடி செய்த போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2021 6:44 PM GMT (Updated: 2022-01-01T00:14:34+05:30)

கணவரை பிரிந்து வாழும் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, ரூ.86 லட்சம் மோசடி செய்த போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மேற்கண்ட முகவரியில் வசிக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது ஒரே மகள் தனது கணவரை பிரிந்து என்னுடன் வாழ்கிறாள். அவளை மறுமணம் செய்து கொள்வதாக, திருவொற்றியூரைச் சேர்ந்த சிவா என்ற சந்திரசேகர் என்பவர் என்னை அணுகினார். என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்குவதற்கு அவர் வலை விரிக்கிறார் என்று முதலில் எனக்கு தெரியாது.

அவர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறினார். சிறப்பு புலனாய்வு பிரிவில் அவர் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். எனது மகளுக்கு முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அதற்கு தனக்கு தெரிந்த வக்கீல்களை நியமித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் நம்பிக்கை இருந்தது. காலப்போக்கில் என்னிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக ரூ.86 லட்சம் வரை பணம் வாங்கினார். எனது சொகுசு காரையும் அவர் தனது பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டார். எனக்கு மருமகன் ஆகப்போகிறார், என்ற ஆசையில் அவர் கேட்டதை எல்லாம் கொடுத்தேன். திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார். கார் மற்றும் ரூ.86 லட்சம் பணத்தையும் கொடுத்து மோசம் போய்விட்டேன்.

போலி இன்ஸ்பெக்டர்

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நான் இழந்த பணத்தையும், காரையும் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன், உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சந்திரசேகர் ஒரு மோசடி பேர் வழி என்று தெரியவந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று சொன்னதும் பொய் என்பது அம்பலமானது. டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சந்திரசேகர், ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவியும், பட்டப்படிப்பு படிக்கும் மகனும், 11-ம் வகுப்பு படிக்கும் மகளும் கோவையில் உள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.

பெண்களை ஏமாற்றினார்

சந்திரசேகர், பெண்களிடம் பழகி, திருமண ஆசைகாட்டி அவர்களிடம் பணம் பறிப்பதை பழக்கமாக வைத்திருப்பதும் தெரியவந்தது. தலைமறை வாக இருந்த சந்திரசேகர் (வயது 41) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறார், என்று விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story