மின்கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி


மின்கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 11:24 PM GMT (Updated: 3 Jan 2022 11:24 PM GMT)

‘தமிழகத்தில் மின்சார கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்மாற்றிகள் மாற்றம்

தமிழகத்தில் பழுதடைந்துள்ள அதிக மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்த மின்மாற்றிகளை மாற்றிவிட்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகளில் 7 ஆயிரத்து 833 மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. எஞ்சிய 1,072 மின்மாற்றிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 1-ந்தேதி வரை 20 ஆயிரத்து 132 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரத்து 173 விவசாயிகளுக்கு மின்இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. எஞ்சிய விவசாயிகளுக்கும் வரும் மார்ச் மாதத்துக்குள் இணைப்பு வழங்கப்படும்.

புதிய துணை மின்நிலையங்கள்

அதேபோல், 216 துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 143 துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய 73 துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி, அந்தந்த மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெறும். இந்த 143 துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு விரைவில் டெண்டர் கோரப்படும்.

கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. தேவையான மின்சாரத்தை வினியோகம் செய்ய வாரியம் தயார் நிலையில் இருந்து வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி இல்லை

இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியிலேயே மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு, அவர்கள் ஆட்சி முடிவதற்குள் 2.66 லட்சம் விவசாய மின்இணைப்புகளில் மீட்டர் பொருத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஓ.பன்னீர்செல்வம் இதை தெரிந்து கூறுகிறாரோ அல்லது தெரிந்தும் மறைத்தாரா என தெரியவில்லை. எனவே, தி.மு.க. ஆட்சியில்தான் இப்பணி தொடங்கப்பட்டதாக கூறுவது தவறானது.

அதேபோல் மின்சார வாரியத்தில் இதர சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2017-ல் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டே மின்வாரியத்தில் இதர சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்பட்டது கடந்த ஆட்சியில்தான். இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படுவதாக தவறான தகவலை கூறியுள்ளார். பொதுவாக, மின்கட்டணத்தை பொறுத்தவரை எவ்வித ஜி.எஸ்.டி. கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதர சேவைகளுக்குதான் ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, எவ்வித புதிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story