ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது சட்டசபையில் கவர்னர் உரை


ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது சட்டசபையில் கவர்னர் உரை
x

ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

பதவியேற்ற முதல் நொடியில் இருந்தே, ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் முடுக்கிவிட்டு, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் மாநிலம் எங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலையை திறம்பட கையாண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனமார பாராட்டுகிறேன்.

மாநிலத்தின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்படையாமல், கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்திய முறை நமது நாட்டுக்கே முன்னோடியாக அமைந்தது.

மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பல சிறப்பு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும், வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்றபோது, தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்களில் 8.09 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவீத மக்களுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் என்ற குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டு இருந்தது.

இந்த அரசின் சீரிய முயற்சிகளால் இந்தநிலை மாறி, 7 மாதங்களில் 86.95 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 சதவீத மக்களுக்கு 2-வது தவணையும் என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் முழுமையாக வெற்றிபெற தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

கூடுதல் தவணை தடுப்பூசி

கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ள புதிய கொள்கையை பின்பற்றி, 15 முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை மாநில அரசு வழங்கி வருகின்றது. மேலும் முன்களப்பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் கூடுதல் தவணையில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

அண்மையில், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பரவலை தடுப்பதற்காக, பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனையும், ஆய்வு செயல்முறைகளையும் அரசு வலுப்படுத்தி உள்ளது.

ஒமைக்ரானை எதிர்கொள்ள தயார்

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலையின் அனுபவத்தின் அடிப்படையில், நமது நாட்டிற்கே எடுத்துக்காட்டாக மரபணு வரிசை முறை சோதனை வசதிகள் இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை வசதிகளை அதிகரித்தல், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பி.எஸ்.ஏ. ஆலைகளை நிறுவுதல், அவசர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இப்புதிய மாற்றம் பெற்ற வைரசின் (ஒமைக்ரான்) சவால்களை எதிர்கொள்வதற்கு அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சமும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும் நிவாரணமாக இந்த அரசு வழங்குகின்றது. இதுமட்டுமின்றி, இத்தொற்றால் உயிரிழப்பு நேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 432 குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

நிவாரணப்பணிகள்

இந்த அரசு பொறுப்பேற்றபின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து ரூ.543 கோடி நன்கொடையாக பெறப்பட்டது. இந்த நிதியில் இருந்து இதுவரை கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.541.64 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

தலைவர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக பெறலாம் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதன் பயனாக இதுவரை 33 ஆயிரத்து 117 பேர் ரூ.387 கோடி மதிப்பிலான சிகிச்சைகளை பெற்றுள்ளனர்.

வைப்புத்தொகை

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சத்தை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத்தொகையாக அரசு வைத்து வருகின்றது.

வைப்பீடு செய்யப்பட்ட அத்தொகை குழந்தைகள் 18 வயதை எட்டும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக 287 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 513 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

வேகத்துடன் செயல்படுவோம்

இந்த அரசு பதவியேற்ற பின், கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை, எதிர்பாராத மழைப்பொழிவு என எதிர்கொண்ட அனைத்து சோதனைகளையும் வென்று அவற்றை சாதனைகளாக மாற்றி, மக்களின் நலனிற்காக அயராது செயல்படும் அரசாக இந்த அரசு இயங்குகின்றது.

இதே வேகத்துடனும், துல்லியத்துடனும் ஒவ்வொரு நாளும் செயல்படுவோம் என்று உறுதியேற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story