சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் 30 மருத்துவ மாணவர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா


சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் 30 மருத்துவ மாணவர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jan 2022 9:20 PM GMT (Updated: 6 Jan 2022 9:20 PM GMT)

சென்னையில் உள்ள ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் 30 மருத்துவ மாணவர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் கடந்த மாதம் வரை குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, சில நாட்களாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த மருத்துவ மாணவர்கள், நர்சுகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பரிசோதனை செய்ததில் 97 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டது, டாக்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

30 பேருக்கு தொற்று

இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மாணவர்கள் புத்தாண்டையொட்டி, அவர்களது சொந்த ஊர்களுக்கும், சிலர் நண்பர்களுடன் சுற்றுலாவுக்கும் சென்று வந்துள்ளனர். விடுமுறை முடிந்து கடந்த 4-ந்தேதி அவர்கள் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு திரும்பினர். அப்போது, அவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களது பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் 30 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், தற்போது அனைத்து மாணவர்களும் நலமுடன் இருப்பதாகவும், அனைவரும் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய இவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி

அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கீழ்ப்பாக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னையில் தினசரி 5-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story