ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 8 Jan 2022 8:28 AM GMT (Updated: 2022-01-08T13:58:05+05:30)

ஆற்று மணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

பொதுமக்கள், ஏழை-எளியோர், புதிதாக வீடுகட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டிருந்தார். 

தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை-எளியோர் பயன் பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டிருந்தார். 

பொதுமக்கள், ஏழை- எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.

தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்பட உள்ள வங்கிகளின் கவுண்ட்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வசதியை, தற்போது நடைமுறையில் உள்ள இணையதள வங்கி கணக்கு (நெட் பேங்கிங்), ஏ.டி.எம். அட்டை(டெபிட் கார்டு) மற்றும் யூ.பி.ஐ. ஆகிய ஆன்-லைன் சேவைகள் வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு இந்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆற்று மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story