ரூ.4½ லட்சம் மோசடி: உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என மிரட்டிய சென்னை வாலிபர் கைது


ரூ.4½ லட்சம் மோசடி: உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என மிரட்டிய சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 8:20 PM GMT (Updated: 9 Jan 2022 8:20 PM GMT)

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4½ லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டு, தான் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என கூறி மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மிரட்டல் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அதே நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவரும் வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தேன்மொழியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4½ லட்சம் கேட்டுள்ளார். அதை உண்மை என நம்பி பல தவணையாக ரூ.4½ லட்சத்தை தேன்மொழி கொடுத்துள்ளார்.

ஆனால் ராஜேஷ் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேன்மொழி, ராஜேஷிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

மிரட்டிய வாலிபர் கைது

இதனால் பாதிக்கப்பட்ட தேன்மொழி இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து ஏமாற்றி வந்த ராஜேஷை, தேன்மொழி செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது ராஜேஷ், நான் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேர்முக உதவியாளர், என்னை, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், நான் நினைத்தால் உன்நிலை அவ்வளவுதான் என மிரட்டி உள்ளார். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் எந்த கட்சியிலும் இல்லை என்பதும், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் இல்லை என்பதும், பண மோசடி குற்றத்தில் இருந்து தப்பிக்க இதுபோன்று பேசியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story