திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது


திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 10 Jan 2022 10:23 PM GMT (Updated: 2022-01-11T03:53:45+05:30)

திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு நேரடி விமான சேவையும், பின்பு திருச்சியிலிருந்து பெங்களூரு வழியாக புதுடெல்லிக்கும், அதன்பின்பு திருச்சியிலிருந்து மும்பை வழியாக புதுடெல்லிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கு பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

இந்த நிலையில் மீண்டும் திருச்சியிலிருந்து புதுடில்லிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமானமானது காலை 5.25 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 8-40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் இந்த விமானம் மதியம் 2.25 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு புதுடெல்லி சென்றடைகிறது. இந்த சேவை, நேற்று முதல் தொடங்கியது. 

அப்போது புதுடெல்லியில் இருந்து திருச்சிக்கு 72 பயணிகளும், இங்கிருந்து புதுடெல்லிக்கு 32 பயணிகளும் பயணம் செய்தனர். இந்த விமானம் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சியில் இருந்து கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. 

நேற்று முதல் கொழும்புவிற்கு இண்டிகோ விமானம் தனது சேவையை தொடங்கியது. இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 10-05 மணிக்கு 32 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அங்கிருந்து 75 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தை மதியம் வந்தடைந்தது.

Next Story