முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:57 PM GMT (Updated: 10 Jan 2022 11:57 PM GMT)

சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தை கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்கவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்த மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8.83 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 17 மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 3 கோடி 15 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 3.1.2022 அன்று 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, அதில் 33 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், இதுவரை 21 லட்சத்து 52 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் சிறப்பு கவனம் அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தொடங்கி வைத்தார்

சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை(பூஸ்டர்) கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சத்து 65 ஆயிரத்து 218 சுகாதாரப் பணியாளர்கள், 9 லட்சத்து 78 ஆயிரத்து 23 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20 லட்சத்து 83 ஆயிரத்து 800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2 லட்சத்து 6 ஆயிரத்து 128 சுகாதாரப் பணியாளர்கள், 92 ஆயிரத்து 816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 69 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4 லட்சத்து 13 பேர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோட்டில் திட்டப்பணிகள்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.104 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலான 66 முடிவுற்ற திட்டப்பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதேபோல ரூ.45 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டிலான 365 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 40 ஆயிரத்து 95 பயனாளிகளுக்கு ரூ.209 கோடியே 76 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசு கல்லூரி

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது:-

அனைத்து வளமும், நலமும் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதும், அகில இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சி, சமூகநீதி கொள்கையை மலர செய்வதையும் நான் என்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டுள்ளேன். இந்த லட்சிய பயணம் தொடரும். அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Next Story