குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு


குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 13 Jan 2022 9:12 PM GMT (Updated: 13 Jan 2022 9:12 PM GMT)

குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூரைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எறையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை சுட்டுக்கொல்ல அப்போதைய ஊராட்சி தலைவர் குளஞ்சி, துணைத்தலைவர் சின்னத்துரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் ஒரு நபரை நியமித்தனர். கடந்த 25.2.2015 அன்று அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் எனது தாயார் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்தது. பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதும், காலில் பாய்ந்த குண்டை எடுக்கவில்லை. காயத்துக்கு மட்டும் சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் எனது தாயார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘விஜயா உயிரிழந்ததற்கு நாய்களை சட்டவிரோதமாக சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, விஜயா மரணத்திற்கு காரணமான 3 பேரும் சேர்ந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படாததால் தமிழக அரசும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மொத்த இழப்பீடான ரூ.10 லட்சத்தை விஜயாவின் வாரிசுகளுக்கு 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Next Story